ஐபிஎல் 2022: சிக்சர் மழை பொழிந்த உத்தப்பா, தூபே; முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே!
ஐபிஎல்-இன் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெசிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட் முதன்முறையாக களமிறங்குகிறார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வழக்கம் போல ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுடன் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மொயீன் அலி 3 ரன்களில் எதிர்பாரதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு சென்றார். இதனால் சென்னை அணி மீண்டும் தடுமாற்றத்தை சந்தித்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா - ஷிவம் தூபே இணை முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்படி ஆட்டத்தின் 10 ஆவது ஓவர் வரை இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆனால் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ஆர்சிபி பந்துவீச்சினை சிக்சருக்கு பறக்கவிட்ட மின்னல் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா 33 பந்துகளில் அரைசதம் விளாச, அவரைத் தொடர்ந்து 30 பந்துகளில் ஷிவம் தூபேவும் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்த இந்த இணை சிஎஸ்கே அணியை 200 ரன்களைக் கடக்க உதவியது. அதன்பின் 88 ரன்களைச் சேர்த்திருந்த ராபின் உத்தப்பா, ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து சமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா முதல் பந்திலேயே அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியில் பொளந்துகட்டிய ஷிவம் தூபே 46 பந்துகளில் 95 ரன்களை எடுத்து நிலையில் சதத்தைத் தவறவிட்டார்.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ராபின் உத்தப்பா 88 ரன்களையும், ஷிவம் தூபே 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.