ஐபிஎல் 2022: வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!

Updated: Fri, Apr 22 2022 11:36 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 சீசன் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டெழும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் 2ஆவது பந்தில் மிட்-ஆனில் மிட்செல் சான்ட்னரிடம் ஒரு எளிய கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா.

இந்த டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனை ஒன்றை படைத்தார் ரோஹித். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தினார். அனைத்து ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து 14 முறை டக் அவுட் ஆகி இந்த மோசமான சாதனையை படைத்தார். முன்னதாக ரோஹித் ஷர்மா, பியூஷ் சாவ்லா, ஹர்பஜன்சிங், மந்தீப் சிங், பார்த்தீவ் படேல் ஆகிய அனைவரும் 13 முறை டக் அவுட் ஆகி இருந்த நிலையில், மற்ற அனைவரையும் முந்திச் சென்றுவிட்டார் மும்பை கேப்டன்.

ரோஹித் சர்மா மும்பை அணியைப் போலவே தனது சிறப்பான ஃபார்மில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார். இந்த ஐபிஎல் சீசனில் இன்னும் ஒரு அரைசதம் கூட அவர் அடிக்கவில்லை. நடைபெற்றுள்ள 7 போட்டிகளில் அவர் விளாசிய ரன்கள் 41, 10, 3, 26, 28, 6 மற்றும் 0 ஆகும். அவரது சராசரி வெறும் 16. 28 ஆகும். அவரது மோசமான பார்ம் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையிலும் எதிரொலிக்குமா என்ற கவலைக்குரிய கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியை ஹாட்ஸ்டாரில் 83 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 33 போட்டிகளில் இதுதான் அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டியாக அமைந்திருக்கிறது. 19ஆவது ஓவரில் 72 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தோனி மேஜிக் நிகழ்த்திய கடைசி ஓவரில் அந்த எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்தது. இதற்குமுன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியினை 82 லட்சம் பேர் பார்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை