ஐபிஎல் 2022: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சிஎஸ்கே!
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று புனேவில் நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸும் விராட் கோலியும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். அதிரடியாக ஆடி டுப்ளெசிஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சற்று மந்தமாக ஆடிய கோலி 33 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் வெறும் 3 ரன்னில் ரன் அவுட்டானார்.
மிடில் ஓவர்களில் லோம்ரார் அதிரடியாக பேட்டிங் ஆடி 27 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ரஜாத் பட்டிதார் 21 ரன்கள் அடித்தார். டெத் ஓவர்களில் வழக்கம் போலவே அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்,கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார்.17 பந்தில் தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 173 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - டேவன் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய் ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவன் கான்வே அரைசதம் கடந்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய மொயீன் அலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 54 ரன்களுடன் டேவன் கான்வேவும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜடேஜா 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மொயீன் அலி 34 ரன்னிலும், கேப்டன் எம் எஸ் தோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்ததால் இப்போட்டியின் வெற்றி ஆர்சிபி பக்கம் திரும்பியது. இறுதியில் பிரிட்டோரியஸ், தீக்ஷனா ஆகியோர் பவுண்டரிகளை அடித்தாலும் சிஎஸ்கேவால் இலக்கை எட்டமுடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.