ஐபிஎல் 2022: ஆண்ட்ரே ரஸ்ஸல் காட்டடி; பஞ்சாப்பை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் இன்று நடைபெற்ற போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய பானுகா ராஜபக்சா, ஷிவம் மாவி வீசிய 4ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 9 பந்தில் 31 ரன்கள் அடித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பவர் பிளேயின் கடைசி ஓவரில் தவான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பவர் பிளேயில் 6 ஓவரில் 62 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஆரம்பத்தில் வேகமாக உயர்ந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்ததால், அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.
லியாம் லிவிங்ஸ்டோன் 19 ரன்னிலும், ராஜ் பாவா 11 ரன்னிலும், ஷாருக்கான் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஒடீன் ஸ்மித் 9 ரன் மட்டுமே அடித்தார். ஆனால் ககிசோ ரபாடா 16 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 ரன்கள் அடித்தார்.
6 ஓவரில் 62 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய கேகேஆர் அஜிங்கியா ரஹானே அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 12 ரன்களில் ரஹானேவும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 26, நிதீஷ் ராணா ஆகியோர் ராகுல் சஹாரின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - ஆண்ட்ரே ரஸ்ஸல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் ஓடியன் ஸ்மித் வீசிய 12ஆவது ஓவரில் ரஸ்ஸல் மூன்று சிக்சர்கள், ஒரு பவுண்டரியும், பில்லிங்ஸ் ஒரு சிக்சரையும் பறக்கவிட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 26 பந்துகளில் அரைசதம் கடந்து தெறிக்கவிட்டார். இதன்மூலம் கேகேஆர் 14.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 31 பந்துகளில் 8 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை விளாசி 70 ரன்களைச் சேர்த்தார்.