ஐபிஎல் 2022: கேகேஆரை வெளியேற்றியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.
15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடினார் டி காக். 16ஆவது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார் டி காக். 59 பந்தில் சதமடித்த டி காக், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், அபிஜித் தோமர் ஆகியோர் மொஹ்சின் கானின் பந்துவீச்சில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய நிதீஷ் ராணா - கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரசைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் ராணா 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து 36 ரன்களில் சாம் பில்லிங்ஸும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து அணியின் நம்பிக்கையாக இருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் - சுனில் நரைன் இணை சில சிக்சர்களை விளாசி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினர்.
இதனால் கடைசி ஓவரில் கேகேஆர் அணி வெற்றிபெற 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஸ்டோய்னிஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த ரிங்கு சிங், அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார். அதன்பின் ஐந்தாவது பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் எவின் லூயிஸ் அதனை அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். அடுத்து வந்த உமேஷ் யாதவும் க்ளீன் போல்டாகினார்.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
இத்தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது.