ஐபிஎல் 2022: பந்துவீச்சில் அசத்திய ஹைதராபாத்; 154 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு உத்தப்பா - கெய்க்வாட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே உத்தப்பா ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் நடராஜன் வீசிய முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த மொயீன் அலி - அம்பத்தி ராயூடு இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் விளாசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராயுடு 27 ரன்களிலும், மொயீன் அலி 48 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, எம் எஸ் தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் கேப்டன் ஜடேஜா - டுவைன் பிராவோ இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்,
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.