ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக் வேகத்தில் சரிந்தது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மேலும் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து கேப்டன் மயங்க் அகர்வால் காயம் காரணமாக விலகினார். இதனால் ஷிகர் தவான் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
அதன்பின் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - ப்ராப்ஷிம்ரன் சிங் ஓரளவு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின் 14 ரன்களில் ப்ராப்ஷிம்ரன் சிங் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மாவும் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டோன் பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டு 26 ரன்களில் அரைசதம் கடந்தார்.
அவருக்கு துணையாக ஷாருக் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ரன்களைச் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து 60 ரன்கள் சேர்த்திருந்த லியாம் லிவிங்ஸ்டோனும் விக்கெட்டை இழந்தார்.
ஹைதராபாத் அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஓவரை மெய்டனாகவும் மாற்றி அசத்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.