ஐபிஎல் 2022: வார்னர், பாவல் அதிரடி; டெல்லிக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ரன் ஏதுமின்றியும், அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - ரிஷப் பந்த் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையடி வந்த டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடி வந்த ரோவ்மன் பாவல் எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி பந்துவீச்சாளர்களை திணரவைத்தார்.
இதன்மூலம் இந்த இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரோவ்மன் பாவல் 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு ரன்களைக் 207 குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 92 ரன்களுடனும், ரோவ்மன் பாவல் 67 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.