ஐபிஎல் 2022: பயமற்ற விளையாட்டை விளையாட வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ்ராணா 57 ரன் எடுத்தது டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய டெல்லி அணி 84 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தவித்தது. அதன்பின் ரோமன் பாவெல் அக்சர் பட்டேல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. டெல்லி அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து வென்றது.
வெற்றி குறித்து டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறும்போது, “நாங்கள் நடு ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் அந்த நேரத்தில் அதிகமான ரன் எடுக்க தேவைப்படாததால் இலக்கை கடந்து விட முடியும் என்பதை அறிவோம்.
ரோவ்மன் பாவெல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவராக பார்க்கிறோம். அந்த பணியை அவர் நன்றாகவே செய்துள்ளார். குல்தீப் யாதவுக்கு 4ஆவது ஓவர் கொடுக்காதது பற்றி கேட்கிறார்கள். ஆடுகளத்தின் ஒரு முனையில் இருந்து அவருக்கு இன்னொரு ஓவரை கொடுக்க நினைத்தேன். பின்னர் அவர் மறுமுனையில் இருந்து பந்து வீச முடியும் என்று நினைத்தோம்.
பந்து ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளரிடம் கொடுப்பது நல்லது என நினைத்தோம். வேகப்பந்து வீச்சை கொண்டு வருவதற்காக அவரை நிறுத்தினேன். அது எங்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும்” என்று தெரிவித்தார்.
கொல்கத்தா அணி தொடர்ந்து 5ஆவது தோல்வியை சந்தித்தது. அதுகுறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “நாங்கள் ஆட்டத்தை மெதுவாக தொடங்கினோம். விக்கெட்டுகளையும் இழந்தோம். நாங்கள் எடுத்த ரன் இந்த ஆடுகளத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன். முதல் பாதியில் நாங்கள் விளையாடிய விதத்துக்கு எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.