ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!

Updated: Sat, May 07 2022 19:25 IST
IPL 2022: Yashasvi Jaiswal's fifty helps Rajasthan Royals beat Punjab Kings by 6 wickets (Image Source: Google)

இன்று நடைபெற்ற  ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அந்த அணி தரப்பில் தவானும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி பஞ்சாப்பின் ரன் கணக்கை துவக்கினார் பேர்ஸ்டோவ். தவானும் தன் பங்குக்கு அதிரடியாகவே ஆட்டத்தை துவக்கினார்.

3ஆவது ஓவரை வீசிய போல்ட் மிக அபாரமாக அந்த ஓவரை வீசி, ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக்கினார். கூல்தீப் சென் வீசிய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி, ரன் தேக்கத்தை ஈடுசெய்தார் பேர்ஸ்டோவ். அடுத்து போல்ட் வீசிய 5வது ஓவரில் இருவரும் இணைந்து 2 பவுண்டரி , ஒரு சிக்ஸர் விளாச அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறத் துவங்கியது.

ஆனால் அஸ்வின் சுழலில் சிக்கி தவான் அவுட்டாக, பனுகா ராஜபக்சே களமிறங்கினார். பனுகாவும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி பேர்ஸ்டோவ் பக்கம் முழு அழுத்தமும் சேராமல் பார்த்துக் கொண்டார். இருவரும் இணைசேர்ந்து பஞ்சாப் பவுலிங்கை பதம்பார்க்க, 10 ஓவர்களில் 88-1 என்ற நிலையில் வலுவாக ரன் குவித்து இருந்தது பஞ்சாப்.

ஆனால் இந்த கூட்டணியை தன் சுழல் மூலம் தகர்த்தெறிந்தார் சாஹல். அவர் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் பனுகா. அடுத்து வந்த கேப்டன் மயங்க் அகர்வால் பொறுப்பாக விளையாடி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். மறுபக்கம் 35 பந்துகளை மட்டும் சந்தித்து அரைசதம் விளாசினார் பேர்ஸ்டோவ்.

நிலைப்பெற துவங்கிய இந்தக் கூட்டணிக்கும் வில்லனாக வந்தார் சாஹல். அவர் வீசிய சுழலில் சிக்கி மயங்க் அகர்வால் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் தொடர்ந்து பேர்ஸ்டோவும் சஹாலிடம் சிக்கி எல்பிடபுள்யூ ஆகி வெளியேற பஞ்சாப் அணி தடுமாறத் துவங்கியது. மிக முக்கிய டெத் ஓவர்களில் கூட்டணி சேர்ந்தனர் லிவிங்ஸ்டனும் ஜித்தேஷ் சர்மாவும்.

இருவரும் பொறுப்பாக விளையாடி, ஏதுவான பந்துகளில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாச ஸ்கோர் மீண்டும் உயரத் துவங்கியது. 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசி 22 ரன் சேர்த்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். இறுதியாக குல்தீப் சென் வீசிய கடைசி ஓவரில், ஜித்தேஷ் ஷர்மா 2 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி அசத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அபாரமாக பந்துவீசிய சஹால் 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து ராஜஸ்தான் அணியில் பட்லர் உடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கினார். சந்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ஜெய்ஸ்வால். அந்த முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல், ரபாடா வீசிய நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசிய பட்லர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பட்லர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். 

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிவந்த ஜெய்ஸ்வால் 68 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் தேவ்தத் படிக்கலும் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன்மூலம் 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை