ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 121 ரன்களில் சுருட்டியது லக்னோ!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மயங்க் அகர்வால் - அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து அன்மோல்ரீதுடன் இணைந்த ராகுல் திரிபாதியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின் 31 ரன்களைச் சேர்த்திருந்த அன்மோப்ரீத் சிங் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி குர்னால் பாண்டியாவிடம் ஆட்டமிழந்தார். அவரைத்தொடந்து வந்த ஹாரி ப்ரூக்கும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த வாஷிங்டன் சுந்த ஓரளவு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் சிறிது நேரத்திலேயே வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களிலும், ஆதில் ரஷித் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் அப்துல் சமத் தனது பங்கிற்கு கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை மட்டுமே சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் குர்னால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.