ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!

Updated: Thu, May 11 2023 22:48 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டி ஆகும். 11 போட்டிகளில் தலா 5 வெற்றிகளுடன் புள்லி பட்டியலில் 5 மற்றும் 6ஆம் இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் வெற்றி கட்டாயத்துடன் இன்றைய போட்டியில் விளையாடியன்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக தொடங்கினர் .ஆனால் ஜேசன் ராய் 10 ரன்களிலும் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 18 ரன்களிலும் இருந்த போது இருவரையும் டிரெண்ட் போல்ட் வீழ்த்தினார். 

அதன்பின்னர் நிதிஷ் ராணாவை 22 ரன்களூக்கு சாஹல் வீழ்த்த, ஆண்ட்ரே ரஸலை 10 ரன்களுக்கு கேஎம் ஆசிஃப் வீழ்த்தினார். அதன்பின் வந்த ரிங்கு சிங்(16), ஷர்துல் தாகூர்(1) ஆகியோரையும் சாஹல் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயரை57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

வெங்கடேஷ் ஐயரை தவிர யாருமே சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஒவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்தது கேகேஆர் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஷ்வால் - ஜோஸ் பட்லர் இணை களமிறங்கினர். கேகேஆர் அணி தரப்பில் முதல் ஓவரை கேப்டன் நிதீஷ் ராணா வீச அதனை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஷ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 26 ரன்களைச் சேர்த்தார். 

அதேசமயம் மறுமுனையில் ஜோஸ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் தனது அதிரடியைக் கைவிடாத யஷஸ்வி ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்து சாதனைப் படைத்தார். 

அவருடன் இனைந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஷ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி 5 சிக்சர்கள் என 98 ரன்களைச் சேர்த்து இரண்டு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் சஞ்சு சாம்சனும் 2 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 48 ரன்களைச் சேர்த்து அரைசதத்தை தவறவிட்டார்.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியளில் மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை