ஐபிஎல் 2023: ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Sat, Apr 08 2023 19:34 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்றைய 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதல் 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரியான் பராக் 7 ரன்களில் கிளம்ப மறுபுறும் பட்லர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். 

அதனால் ராஜஸ்தான் அணி 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்திருந்தது. பட்லருக்கு உறுதுணையாக நின்று ஹெட்மேயர் சிக்ஸர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். டெல்லி அணிக்கு தண்ணி காட்டிய பட்லரை முகேஷ்குமார் 79 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 199 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டிரெண்ட் போல்ட வீசிய முதல் ஓவரில் பிரித்வி ஷா மற்றும் மனீஷ் பாண்டே இருவரும் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த ரைலி ரூஸோவு 14 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - லலித் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லலித் யாதவ் 38 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய அக்சர் படேல், ரொவ்மன் பாவெல், அபிஷேக் பரோல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

மறுமுனையில் தனிஒருவனாக போராடி வந்த டேவிட் வார்னரும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக தங்களது மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை