ஐபிஎல் 2023: சாம் கரண் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 31ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய மேத்யூ ஷார்ட் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கட்டை இழந்தார். அதன்பின் பிரப்சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த டைட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின் 28 ரன்களில் பிரப்சிம்ர்ன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் 10 ரன்களிலும், அதர்வா டைட் 29 ரன்களிலும் என அடுத்தடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் பாட்டியா - கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹர்ப்ரீத் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா சந்தித்த முதலிரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார்.
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் கரண் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 29 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 55 ரன்களை விளாசிய சாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீசில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத ஜித்தேஷ் சர்மா இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். பின் 7 பந்துகளில் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 25 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைக் குவித்தது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.