தொடரை நல்லபடியாக முடிக்க நினைக்கிறோம் - ஐடன் மார்க்ரம்!

Updated: Tue, May 16 2023 18:02 IST
Image Source: Google
நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் வருவதற்கு பலமான அடித்தளத்தை போட்டு இருக்கிறது. இப்போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 57 பந்தில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்பு விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே மடமடவென்று விக்கெட்டுகளை விட்டு ஒன்பது விக்கெட்டுகளுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது. சுப்மன் கில் தனது சத இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளையும் ஒரே ஒரு சிக்சரை மட்டும் அடித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் தோல்வி குறித்து பேசிய ஐடன் மார்க்ரம், “நாங்கள் இந்த போட்டியில் பாதிவரை வெற்றிக்கான வாய்ப்பில் இருந்ததாகவே நினைக்கிறேன். ஆனால் துவக்கத்திலேயே பவர் பிளேவிற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் அதன் பிறகு வந்த ஓவர்கள் மிகவும் சவாலானாதாக மாறியது. எனவே பேட்டிங்கில் நாங்கள் தடுமாற்றத்தை சந்தித்தோம். அதே போன்று எங்களிடம் நல்ல தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி அசத்தினார். இருந்தாலும் எங்கள் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார். கிளாஸன் எவ்வளவு பெரிய வீரர் என்பதை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டி வருகிறார். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் சில முக்கிய பாடங்களை கற்றுள்ளோம். இனிவரும் போட்டிகளில் எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் வெற்றி பெற்று இந்த தொடரை நல்லபடியாக முடிக்க நினைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை