தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான் - ஐடன் மார்க்ரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுக்க மற்ற யாரும் சரியாக விளையாடாத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஜடேஜா நான்கு ஓவர்களுக்கு 22 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு ருத்ராஜ் – கான்வே ஜோடி முதல் விக்கட்டுக்கு 87 ரன்கள் தந்தது. கான்வே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 57 பந்தில் 77 ரன்கள் எடுக்க 18. 4 ஓவர்களில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஏழாவது ஆட்டத்தில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
தோல்வியை தழுவிய பிறகு பேட்டி அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், “தோல்வியடைந்த அணியாக இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த பிட்ச்சில் 130 ரன்கள் அடித்தால் போதாது. 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும். இந்த இடத்தில் சிஎஸ்கே பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். எனது பாராட்டுக்கள். எங்களது பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
சிஎஸ்கே பவுலர்கள் இந்த மைதானத்தில் எப்படி செயல்படுவார்கள் என்று நன்றாக உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் திட்டத்தை வகுத்து இங்கு வந்தோம்.ஆனால் சிஎஸ்கே பவுலர்களுக்கு தாக்கம் கொடுத்து, அவர்களது பவுலிங்கில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து, பாட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம். அணியில் சில பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எங்களது பவுலர்கள் செயல்பட்டவிதம் மகிழ்ச்சி அளிக்கிறது. தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான்.” என்று தெரிவித்துள்ளார்.