ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!

Updated: Sun, May 28 2023 19:41 IST
Image Source: Google

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “2 சிறந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். ஆறாவது இரவு என்று நம்புகிறேன். 

இது ஒரு அற்புதமான பயணம். இன்றிரவு நடக்கும் இறுதிப் போட்டியே ஐபிஎல் தொடர்களில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த டோர்னமென்ட்டில் ஆடியதை நான் மிகவும் ரசித்தேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. இனி யூடர்ன் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

 

ராயுடு 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார் மற்றும் 2017 சீசன் வரை அந்த அணிக்காக விளையாடினார். பின்னர் 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அந்த ஆண்டில் அவர் 16 இன்னிங்ஸ்களில் 43 சராசரியுடன் 602 ரன்கள் எடுத்தார். அதே சீசனில் தனது 100வது நாட் அவுட்டையும் பதிவு செய்திருந்தார். ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை