ஐபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட வார்னர்; பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க விரர்களான ருதுராஜ் கெய்வாட்டும், டெவோன் கான்வேவும் இணைந்து டெல்லியைப் பந்தாடினர். 12ஆவது ஓவரில் மட்டும் தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி ருதுராஜ் அதிரடி காட்டினார். 14 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி பார்த்துக்கொண்ட இந்த இணையை 15ஆவது ஓவரில் சேதன் சகாரியா பிரித்தார். 7 சிக்சர்களை விளாசி வெளுத்து வாங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்து வந்த ஷிவம் தூபே வந்த வேகத்தில் 3 சிக்ஸ்களை பறக்க விட்டு 22 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவோன் கான்வே 52 பந்துகளில் 87 ரன்களை குவித்து சென்சூரி அடிக்காமல் போனது ஏமாற்றம். தொடர்ந்து வந்த ஜடேஜா அடித்த சிக்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
இறுதி பந்தில் ஸ்ட்ரைக்கிலிருந்த தோனி தூக்கி அடிக்க சிக்ஸ் மிஸ்ஸானது. அத்துடன் அது ஃப்ரீ ஹிட்டானதால் ரசிகர்கள் தோனியின் சிக்ஸுக்காக காத்திருந்த நிலையில், சிங்கிளுடன் முடிந்த இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 223 ரன்களை குவித்து 224 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணி தரப்பில் சேதன் சகாரியா, கலீல் அஹமத், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் பிலிப் சால்ட் 5 ரன்னிலும், ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய யாஷ் துல், அக்ஸர் படேல், அமான் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த டேவிட் வார்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 சிக்சர், 7 பவுண்டரி என 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் மஹீஷ் தீக்ஷனா பந்திவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, மதிஷா பதிரனா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 17 புள்ளிகளைப் பெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனைப் படைத்துள்ளது.