ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!

Updated: Sun, Apr 23 2023 21:22 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் பாரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தது. 

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த டெவான் கான்வேவும் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த அஜிங்கியா ரஹானே - ஷிவம் தூபே இணை சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரஹானே 24 பந்துகளிலும், ஷிவம் தூபே 20 பந்துகளிலும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர்.

பின் ஷிவம் தூபே 21 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.  ஆனாலும் தனது அதிரடியை நிறுத்தாத அஜிங்கியா ரஹானே அடுத்தடுத்து சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பிரித்து மேய்ந்தார். அவருடன் இணைந்த ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய கையோடு 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை விளாசியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஜிங்கியா ரஹானே 29 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 71 ரன்களைக் குவித்து அசத்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை