ஐபிஎல் 2023: கான்வே, கெய்க்வாட் அதிரடி; டெல்லிக்கு 224 டார்க்டெ!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் மூதமுள்ள இடங்களைப் பிடிக்க அணிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று நடைபெற்றுவரும் 67ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து டெல்லி அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் - டெவான் கான்வே இணை களமிறங்கியனர். முதல் ஓவர் முதலே அதிரடி காட்டத்தொடங்கிய இந்த இணை டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்களைச் சேர்த்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடக்க, அவரைத் தொடர்ந்து டெவான் கான்வேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இருவரும் அரைசதம் கடந்த பின் சிக்சர் மழை பொழிந்தனர். அதிலும் ருதுராஜ் கெய்க்வாட், அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரது பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினர்.
அதன்பின் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 79 ரன்களைச் சேர்த்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே தனது பங்கிற்கு 3 சிக்சர்களை பறக்கவிட்டு 22 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழந்து 13 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து தோனியுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 223 ரன்களைக் குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சேத்தன் சகாரியா, கலீல் அஹ்மத், ஆன்ரிச் நோர்ட்ஜே தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.