ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத், சென்னை அணிகள் ஏற்ழத்தால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க மற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இதில் இன்று நடைபெறும் 61ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சென்னை அணி வெற்றிபெற்றால் டாப் இரண்டு இடங்களை தக்கவைக்கும். அதேசமயம் கொல்கத்தா அண் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். சிஎஸ்கே சொந்த மண்ணில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்ற நிலையில் இன்றைய போட்டியை அணுகுகிறது. பேட்டிங், பந்து வீச்சு என இரு துறையிலும் சிஎஸ்கே சிறந்து விளங்குகிறது.
டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம் கொடுத்து வருகின்றனர். நடு ஓவர்களில் ஷிவம் துபே, அஜிங்கிய ரஹானே ஆகியோர் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கின்றனர். மொயின் அலி, அம்பதி ராயுடு, ஜடேஜா ஆகியோரும் முடிந்த அளவுக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இறுதி ஓவர்களில் தோனயின் ஃபினீஷிங் இலக்கை கொடுக்கவும், துரத்தவும் ஏதுவாக உள்ளது.
பந்து வீச்சில் தொடக்க ஓவர்களில் தீபக் ஷாகர், துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக செயல்படுகின்றனர். இதில் துஷார்தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தக்கூடியவராக திகழ்கிறார். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, தீக்சனா,மொயின் அலி ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். இறுதிக்கட்ட ஓவர்களில் மதீஷா பதிரனா ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட் வேட்டையும் நிகழ்த்தி வருவது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்கள் கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளையே அடைய முடியும். இது நிகழ்ந்தாலும் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்க தொடங்கி உள்ளதால் வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சுனில் நரேன் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால் மட்டை வீச்சில் கொல்கத்தா சிறப்பாக செயல்படுவது அவசியம். நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் சீரான திறனை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 28
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 18
- கொல்கத்தா நைட் ரடர்ஸ் - 09
- முடிவில்லை -01
உத்தேச லெவன்
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கே), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா.
கேகேஆர்: ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ஆண்ட்ரே ரஸல், ரின்கு சிங், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே (துணை கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள் - நிதிஷ் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஜேசன் ராய், ரிங்கு சிங்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், மொயீன் அலி
- பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, மதிஷா பத்திரனா
*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.