ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!

Updated: Wed, May 24 2023 10:58 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், தர்ஷன் நல்கண்டே வீசிய இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுக்க, ஆரம்பமே ஆட்டம் காண நேர்ந்தது. ஆனால் அது நோபால் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர்.

அதன்பின் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் டெவான் கான்வே பந்தை சரியாக மீட் செய்ய முடியாமல் தடுமாறினார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 60 ரன்களைச் சேர்த்திருந்த கெய்க்வாட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஷிவம் தூபே ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானே அதிரடி காட்டத்தொடங்கினாலும் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 17 ரன்களிலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இறுதியில் 22 ரன்களை எடுத்திருந்திர ஜடேஜா, கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் க்ளீன் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி, மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சஹா, தீபக் சஹார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.  அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 8 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் தீக்‌ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து வந்த தசுன் ஷானகா 17 ரன்களிலும், டேவிட் மில்லர் 4 ரன்களிலும் என ரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில்லும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியாவும் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் - ரஷித் கான் இணை அதிரடியாக விளையாடி சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். பின் 14 ரன்களில் விஜய் சங்கர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தர்ஷன் நல்கண்டேவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் சிஎஸ்கேவுக்கு பயத்தைக் காட்டிவந்த ரஷித் கான் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த முகமது ஷமியும் ஆட்டத்தின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்‌ஷனா, மதிஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை