ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி வீண்; ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!

Updated: Mon, Apr 17 2023 23:20 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய 24ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை களமிறங்கினர். இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே களமிறங்கியது முதல் சிக்சர் மழை பொழிய அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் டெவான் கான்வேவும் பவுண்டரிகளை விளாசித்தள்ளினார். பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த டெவான் கான்வே 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் போல்டாகினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடிக் காட்டிய ஷிவம் தூபே 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 5 சிக்சரகள், 2 பவுண்டரி என 52 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைச் சேர்த்து. ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ், வநிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னெல், விஜயகுமார், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் எதிர்பாராதவிதமாக போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மஹிபால் லாம்ரோரும் ரன்கள் ஏதுமின்றி தேஷ்பாண்டே பந்துவீல் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணி 15 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய ஃபாஃப் டூ பிளெசிஸ் 24 பந்துகளிலும், கிளென் மேக்ஸ்வெல் 25 பந்துகளிலும் என அடுத்தடுத்து தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். 

தொடர்ந்து சிக்சர்களால் மிரட்டி வந்த கிளென் மேக்ஸ்வெல் 3 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 76 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 62 ரன்களிலும் என அடுத்தடுத்து முக்கியமான கட்டத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினாலும் 3 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஷபாஸ் அஹ்மத் 12 ரன்னுக்கு விக்கெட்டை இழக்க, ஆர்சிபி அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் சிஎஸ்கே தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய துசார் தேஷ்பாண்டே 12 ரன்களை கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் ஆர்சிபியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆனால் ஆர்சிபி அணியால் அந்த ஓவரில் 10 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கே தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் 3ஆவது வெற்றியையும் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை