ஐபிஎல் 2023: இஷாந்த் இஸ் பேக்; குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், இன்றைய 44ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்படியொரு மோசமான தொடக்கம் டெல்லிக்கு அமைந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு முதல் பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டானார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் ரன் அவுட். 3-வது ஓவரில் ரிலீ ரோசோவ் அவுட். அடுத்து பிரியம் கார்க் என முதல் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 23 ரன்களை மட்டுமே சேர்த்தது டெல்லி.
அமன் ஹக்கீம் கான் - அக்ஸர் படேல் இணைந்து ஸ்கோர்களை உயர்த்தினர். ஆனாலும் அக்சர் படேல் 27 ரன்களிலும், அமன் ஹக்கீம்கான் 51 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சோபிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. குஜராத் தரப்பில் முஹம்மது சமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா ரன்கள் ஏதுமின்றியும், ஷுப்மன் கில் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடந்து போட்டியில் அரைசதம் கடந்திருந்த விஜய் சங்கரை 6 ரன்களில் க்ளீன் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார் இஷாந்த் சர்மா.
அதன்பின் வந்த அதிரடி வீரர் டேவிட் மில்லரும் ரன்கள் ஏதுமின்றி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் குஜராத் அணியும் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - அபினவ் மனோகர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்தார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் அபினவ் மனோகர் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து குஜராத் அணி வெற்றிபெற கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
டெல்லி அணி தரப்பில் 19ஆவது ஓவரை ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீச, அந்த ஓவரில் ராகுல் திவேத்தியா அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி குஜராத் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் குஜராத் வெற்றிக்கு கடைசி ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி வீரர் இஷாந்த் சர்மா கடைசி ஓவரை வீசினார்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த ராகுல் திவேத்தியா 3 சிக்சர்களை விளாசி 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த ரஷித் கானாலும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 125 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கடைசி ஓவரை அபாரமாக வீசிய இஷாந்த் சர்மா அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், 6 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா, கலில் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.