ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய கான்வே; ஹைதராபாத்தை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!

Updated: Fri, Apr 21 2023 22:51 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்து, ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹாரி ப்ரூக் - அபிஷேக் சர்மா இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஹாரி ப்ரூக் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த அஷேக் சர்மா 34 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 21 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 ரன்களிலும், மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஹென்றிச் கிளாசெனும் 17 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி  களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

அதிலும் மார்கோ ஜான்சன் வீசிய இன்னிங்ஸின் 6ஆவது ஓவரில் டெவான் கான்வே தொடர்ந்து 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரைப் பறக்கவிட்டு மிரட்டினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவான் கான்வே 33 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 35 ரன்களை எடுத்தபோது துரதிர்ஷ்டவசமாக உம்ரான் மாலிக்கால் ரன் அவுட் செய்யப்பட்டு பெவிலியனுக்கு திருபினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்கியா ரஹானேவும் 9 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் 9 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் மார்கண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இருப்பினும் கடைசிவரை அதிரடியாக விளையாடி வந்த டெவான் கான்வே 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77  ரன்களைச் சேர்த்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை