தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!

Updated: Sun, Apr 09 2023 11:45 IST
Image Source: Google

இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று மும்பை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சென்னை சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் சான்ட்னர் இருவரிடமும் சிக்கி ஐந்து விக்கட்டுகளை இழந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இசான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே கான்வே ரன் இல்லாமல் போனாலும், மொயின் அலி உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அணியில் இடம் பெற்ற ரகானே யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு எளிதான ஒரு வெற்றியை வான்கடே மைதானத்தில் வாங்கி தந்து விட்டார். இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ரகானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து சென்னை அணிக்காக இரண்டாவது அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். மொத்தம் 27 பந்துகளை சந்தித்த அவர் 61 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

அணி வெற்றி பெற்ற பிறகு பேசிய அவர், “எனது ஆட்டத்தை ரசித்து நான் விளையாடினேன். டாஸ் போடுவதற்கு கொஞ்ச நேரம் முன்புதான் நான் விளையாட போவது எனக்கு தெரியும். மொயின் அலிக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. நான் இந்த முறை டொமஸ்டிக் சீசனிலும் மற்றும் வலைப் பயிற்சியிலும் சிறப்பாக இருந்தேன். நான் நல்ல கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே விளையாட முயற்சி செய்தேன். ஸ்லாக் செய்ய முயற்சிக்கவில்லை. இது நம் ஷேப்பை மெயின்டன் செய்வது பற்றியது. நீங்கள் மனதளவில் நன்கு தயாராக வேண்டும். ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். 

மேலும் இது பாசிட்டிவாக இருப்பது மற்றும் உங்கள் திறமைகளை நீங்கள் தெரிந்து கொள்வது பற்றியது. மகி பாய் மற்றும் பிளமிங் இருவரும் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் என்னுடைய பலத்தில் கவனம் செலுத்தி, தயாரிப்பில் கவனம் செலுத்துங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டேன். இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானம் எப்படி என்று எனக்கு மிக நன்றாக தெரியும். ஆனால் இங்கு நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதில்லை” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை