மேலும் ஓராண்டு தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா! 

Updated: Tue, May 09 2023 12:12 IST
IPL 2023: Dhoni was saying that after winning the IPL trophy, I will play one more year, reveals Sur (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறது. முன்னதாக அந்த அணிக்கு 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டத்திலிருந்தே கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி சிறப்பாக வழி நடத்தி 15 சீசன்களில் 13 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்து 4 கோப்பைகளை வெல்வதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதை ரசிகர்கள் வருடத்திற்கு ஒருமுறை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்.  இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தம்மை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் மீது இருக்கும் பாசத்தால் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அவர் தெரிவித்த நிலையில் 2019க்குப்பின் தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் தம்முடைய கேரியரின் கடைசி தருணங்களில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின் முடிவில் அவர் மீண்டும் தெரிவித்தார். மேலும் தோனி கடைசி சீசனில் விளையாடுகிறார் என்பதை உணர்ந்து பெங்களூரு, மும்பை போன்ற எதிரணி மைதானங்களிலும் மஞ்சள் உடை அணிந்து ஏராளமான ரசிகர்கள் மெகா ஆதரவு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தாவை மிஞ்சும் அளவுக்கு தாம் ஓய்வு பெறுவதை உணர்ந்து வழியனுப்பும் வகையில் ஆதரவு கொடுத்த உள்ளூர் ரசிகர்களுக்கு தோனி மனதார நன்றி தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதை அவரே மறைமுகமாக உறுதிப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதை அடிப்படையாக வைத்து லக்னோவுக்கு எதிரான போட்டியில் இந்த கடைசி சீசனில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறீர்களா என்று வர்ணனையாளர் டேனி மோரிஸ் என்று கேட்டார். அதற்கு கடைசி சீசனில் விளையாடுகிறேன் என்பதை நீங்கள் தான் முடிவெடுத்துள்ளீர்கள் நான் இல்லை என்று தோனி தெரிவித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த நிலையில் மும்பைக்கு எதிராக சேப்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய ஆதரவை கொடுத்து போட்டியின் முடிவில் பதிரானவுக்கு ஆட்டநாயகன் விருதை பரிசளித்தார். அதை விட போட்டியின் முடிவில் நேரில் சந்தித்த அவரது தோள் மீது தோளாக தோனி மகிழ்ச்சியுடன் சென்றது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் அந்தப் போட்டியின் முடிவில் தோனியிடம் ஓய்வு பற்றி கேட்டீர்களா என்று சமீபத்தில் ரெய்னாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரெய்னா, “கோப்பையை வென்ற பின் நான் மேலும் ஒரு வருடம் விளையாடுவேன் என்று தோனி கூறினார். சிறப்பாக பேட்டிங் செய்யும் அவரது தலைமையில் சென்னை அணி மிகவும் சிறப்பாக செட்டாகியுள்ளது. எனவே அவர் தொடர்ந்து விளையாடுவதை தான் மொத்த இந்தியாவும் பார்க்க விரும்புகிறது என்று நினைக்கிறேன். இருப்பினும் இது உடல் நிலையைப் பொறுத்தது என்பதால் இறுதி முடிவை அவர் தான் எடுப்பார். ஆனால் எனக்குத் தெரிந்த வரை அவர் இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை