ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அரைசதம்; பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!

Updated: Thu, Apr 13 2023 23:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைடான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் இரண்டாவது பந்தே அவுட்டாகி அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தார். 

தொடக்கமே ஏமாற்றமாக அமைந்த பஞ்சாப் ரசிகர்களுக்கு கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களுடன் பெவிலியன் பக்கம் திரும்பி ரசிகர்களின் சோகத்தை மேலும் அதிகப்படுத்தினார். இவர்களுக்குப்பின் வந்த மேத்தேயூ ஷார்ட் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்துவிட்டு தன்னால் முடிந்ததை செய்துவிட்டு கிளம்பினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா, பனுகா ராஜபக்சாவுடன் கூட்டணி அமைத்து ஸ்கோரை முன்னேற்றினாலும் அவசரப்பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டாகி 25 ரன்களில் சுருண்டார்.

இதனால் 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 109 ரன்களை சேர்த்திருந்தது. நிலைத்து ஆடுவார் என எதிர்பார்த்த பனுகா ராஜபக்சா 20 ரன்களிலும், சாம் கர்ரன் 22 ரன்களிலும் விக்கெட்டாக அணியின் ஸ்கோர் தேங்கியது. இறுதியில் ஷாருக்கான் 2 சிக்சர்கள் விளாசி அதே வேகத்தில் நடையைக்கட்டினார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது. ஹர்ப்ரீத் ப்ரார் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். குஜராத் அணி தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான், அல்சாரி ஜோசப், முஹம்மத் சமி, ஜோஷூவா லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸுக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த விருத்திமான் சஹா 30 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் காகிசோ ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் இது ரபாடாவின் 100ஆவது ஐபிஎல் விக்கெட்டாகவும் அமைந்தது. 

அதன்பின் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்துகொண்டே இருந்தது. பின் 19 ரன்களில் சாய் சுதர்சன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் நடப்பு ஐபிஎல் சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய சாம் கரண், 67 ரன்களை சேர்த்து நங்கூரம் போல் பேட்டிங் செய்து வந்த ஷுப்மன் கில்லின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். 

இறுதியில் ராகுல் திவேத்தியா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை