ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸில் இணைந்தார் தசுன் ஷனகா!
ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதேசமயம் பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகியுள்ளனர். இதில் ரசிகர்களில் ஃபேவரைட் கேன் வில்லியம்சன்னும் தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியாக சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யும்பொழுது கால்முட்டி பகுதியில் காயமடைந்ததோடு தொடரை விட்டும் வெளியேறினார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக குஜராத் அணி இங்கிலாந்தின் டேவிட் மலான் மற்றும் ஆஸ்திரேலியாவின் டிராவீஸ் ஹெட் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் குஜராத் அணி சர்வதேச இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கொண்டு வந்திருக்கிறது.
ஆசிய கண்டத்து வீரர் என்பதால் இந்திய சூழ்நிலையில் இவர் மிக நன்றாகவே செயல்படுவார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் இந்திய மண்ணில் இவர் இந்தியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டும் இருக்கிறார்.
தசுன் ஷனகா, ஒட்டுமொத்தமாக 169 டி20 இன்னிங்ஸ்களில் 37 முறை நாட் அவுட் ஆக இருந்து 3,702 ரன்களை அடித்துள்ளார். இதில் இவரது அதிகபட்சம் 131 ரன்கள் நாட் அவுட். மேலும் 92 டி20 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 59 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
இலங்கை அணிக்காக ஃபினிஷிங் ரோலில் செயல்பட்டு வரும் இவர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை நல்ல முறையில் முடித்துக் கொடுக்க கூடியவர். ஏற்கனவே குஜராத் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் இல்லை. பினிஷர்களாக நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்னொரு பினிஷரை பிடித்து வந்திருக்கிறது குஜராத் அணி.