இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை - தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்!

Updated: Sun, May 14 2023 20:03 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 60ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு  பிளெஸ்ஸி 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “நாங்கள் எப்போதும் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்போம். டாப் 3 வீரர்கள் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்கிறோம். ஆனால் இன்று அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஏன் தோல்வியை தழுவினோம் என்பது குறித்து ஆராய வேண்டும். ஆனால் அதற்கான காரணங்களை என்னால் இப்போது சொல்ல முடியாது.

டி20 கிரிக்கெட்டின் இயற்கையே இதுதான். இரண்டு நாள் முன்பு தான் பெரிய வெற்றியை பெற்றோம். ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. இன்று ஆடுகளம் தோய்வு அடையும் என்று தெரியும். இதனால் பவர் பிளேவில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஏதும் கைகூடவில்லை.

ஆர் சி பி பந்துவீச்சாளர்களுக்கும் அந்த அணி வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் அவர்கள் விளையாடினார்கள். இன்றைய ஆட்டம் இறுதிக் கட்டம் வரை சென்று பரபரப்பாக முடியும் என்று நினைத்தேன். ஏனென்றால் ஆர் சி பி நிர்ணயித்த இலக்கு இந்த ஆடுகளத்தில் சராசரியானது தான்.

எங்களுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் ஏன் இவ்வளவு மோசமாக மாறியது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. இதனால் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நானே நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன். எனினும் நாம் மனதளவில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். நம்பிக்கை உடன் கடைசி வரை இருந்து வெற்றிக்காக போராட வேண்டும். ஒரு அணியாக வீரர்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை