இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது - சாம் கரண்!

Updated: Sun, Apr 23 2023 13:12 IST
IPL 2023: I Think Credit Should Go To Pacers, Says Sam Curran After PBKS Beat MI In High-Scorer (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, மூன்றாவது பந்தில் திலக் வர்மா கிளீன் போல்டானார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த துல்லியமான யார்க்கரின் மிடில் ஸ்டம்பானது இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேராவும், முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். அதுவும், திலக் வர்மாவிற்கு வீசப்பட்டது போன்ற துல்லியமான யார்க்கரில் இரண்டாவது முறையாகவும் ஸ்டம்ப் உடைந்தது. அர்ஷ்தீப் சிங்கின் இந்த அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின், ஆட்டநாயகன் விருது பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரணுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சாம் கரண், “வான்கடே மைதானத்தின் சூழல் அற்புதமாக உள்ளது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது. இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஷிகர் தவான் காயமடைந்ததால், நாங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு அணியாக சிறப்பாக உருவாகி இருக்கிறோம். ஷிகர் தவான் விரைந்து குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளோம். நிச்சயம் மோசமான ஆட்டத்தை விளையாடவில்லை என்று நம்புகிறேன். நிர்வாகம் மற்றும் உள்ளூர் வீரர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம். ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். அதில் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை ஆடுவது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். எங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை