ஐபிஎல் 2023: இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி; கேகேஆரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sun, Apr 16 2023 19:25 IST
IPL 2023: Ishan Kishan, Suryakumar Yadav's Blistering Knocks Help Mumbai Win Second Game On The Trot (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினா. 

அதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 8 ரன், ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆகினர். இதையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் நிதிஷ் ராணா களம் இறங்கினர்.

இதில் ராணா 5 ரன், அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 13 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து ரிங்கு சிங் வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணிக்காக 2008ம் ஆண்டில் சதம் அடித்த பிரண்டன் மெக்கல்லத்துக்கு பின்னர் சதம் அடித்த வீரரானார் வெங்கடேஷ் அய்யர்.

சதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 51 பந்தில் 104 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரஸல் களம் இறங்கினார். ரிங்கு சிங் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் ஹிருத்திக் ஷோகீன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸுக்கு இம்பேக் பிளேயராக ரோஹித் சர்மா களமிறங்க, அவருடன் இஷான் கிஷான் தொடக்கம் கொடுத்தார். முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய இந்த இணை வெறும் ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே 65 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. 

பின் 20 ரன்களை சேர்த்திருந்த ரோஹித் சர்மாவின் விக்கெட்டை சுயாஷ் சர்மா கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. மறுப்பக்கம் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளிய இஷான் கிஷான் நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 58 ரன்களை எடுத்திருந்த இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 3 சிக்சர், 4 பவுண்டரிகள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த டிம் டேவிட் 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை