ஐபிஎல் 2023: ரிங்கு, ரானா அசத்தல்; சிஎஸ்கேவை வீழ்த்தியது கேகேஆர்!

Updated: Sun, May 14 2023 23:10 IST
IPL 2023: Kolkata Knight Riders beats Chennai Super Kings by 6 Wickets! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, வழக்கம்போல் கெய்க்வாட் - கான்வே இணை துவக்கம் கொடுத்தனர். இரண்டு பவுண்டரிகளை விளாசிய கெய்க்வாட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே 17 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாடை வெளியேற்றினார். இதன்பின் வந்த 16 ரன்களில் ரஹானேவையும் சக்கரவர்த்தி தனது சுழலால் வீழ்த்த, சிறிதுநேரத்தில் கான்வேவும் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

மிடில் ஆர்டரில் வந்த அம்பதி ராயுடுவையும், மொயீன் அலியையும் ஒற்றை இலக்கத்தில் சுனில் நரைன் ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். இதன்பின் ஷிவம் துபே பொறுப்புடன் விளையாடினார். கேப்டன் தோனி கடைசி இரண்டு பந்துகளைச் சந்தித்தார். ஆனால் இம்முறை அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே அதிகபட்சமாக 48 ரன்களைச் சேர்த்தார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ஜேசன் ராய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.இதில் குர்பாஸ் 9 ரன்களிலும், ஜேசன் ராய் 12 ரன்களிலும், வெங்க்டேஷ் ஐயர் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிதிஷ் ரானா - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த இணையைப் பிரிக்கமுடியாமல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் திணறினர்.  தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

அதன்பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதிஷ் ரானா 57 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை