ஐபிஎல் 2023: ரிங்கு போராட்டம் வீண்; ஒரு ரன்னில் வெற்றிபெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது லக்னோ!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 68ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, லக்னோ அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக கரண் சர்மா மற்றும் டி-காக் களமிறங்கினர். கரண் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் டி-காக்குடன் மன்கத் ஜோடி சேர்ந்தர். இந்த ஜோடி நிதனமாக விளையாடியது. இருப்பினும், டி-காக் 28 ரன்களிலும், மன்கத் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டொய்னிஷ் 0 ரன்னிலும், கேப்டன் க்ருணால் பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், லக்னௌ அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தனர். ஒரு புறம் ஆயுஷ் பதோனி நிதானமாக விளையாட நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆயுஷ் பதோனி 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா சார்பில் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்குர் மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ஜேசன் ராய் - வெங்கடேஷ் ஐயர் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களைச் சேர்த்தனர். பின் பவர்பிளேயின் கடைசி பந்தில் வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் நிதீஷ் ரானா 8 ரன்களுக்கு நடையைக் கட்ட, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 45 ரன்களை எடுத்த நிலையில் குர்னால் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ், ஆண்ட்ரே ரஸல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் கடைசி ஓவரில் கேகேஆர் அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
லக்னோ அணி தரப்பில் கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீச, அதனை எதிர்கொண்ட ரிங்கு சிங்குவால் அந்த ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரியை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கேகேஆர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் என 67 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேற்றி அசத்தியுள்ளது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறைய பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.