கேமரூன் க்ரீன் 3 ஆண்டுகளாக எங்கள் ரேடாரில் உள்ளார் - ஆகாஷ் அம்பானி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பார்கள் என கருதப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தின் சாம் கரண் மற்றும் ஆஸ்திரேலியா இளம் வீரர் கேமரூன் கிரீன் ஆகியோர் மீது அதிக எதிர்பார்புகள் நிலவி வந்தது.
அதற்கேற்ப சுட்டி குழந்தையான சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கிய நிலையில், பின்னர் ஏலத்தில் விடப்பட்ட கேமரூனை கிரீனை வாங்க ஏராளமான அணிகள் போட்டிபோட்டன. குறிப்பாக டெல்லி, மும்பை அணிகள் தீவிரம் காட்டின. இருந்தும் மும்பை அணி வாங்கியது.
ரூ.17.50 கோடிக்கு கேமரூன் க்ரீனை வாங்கியதன் மூலம் மும்பை அணியால் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய இளம் வீரர் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதே மும்பை அணியால் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இருந்தது.
அதேபோல் மும்பை அணியில் ஏற்கனவே டெவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட், பெஹ்ரண்டாஃப் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆர்ச்சர், டிம் டேவிட், பெஹ்ரண்டாஃப் ஆகியோரோடு கேமரூன் கிரீன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் பிரெவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கேமரூன் கிரீனை வாங்கியது குறித்து மும்பை அணி உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், “ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீன் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களின் ரேடாரில் இருக்கிறார்.
நீங்கள் கவனித்திருந்தால், கடந்த இரண்டு ஏலங்களில், நாங்கள் வேண்டுமென்றே இளைய வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என தேர்ந்தெடுத்து, எங்களது அணிக்காக அதிக நாள் விளையாடவைக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளோம் என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் கேமரூன் சரியான தேர்வாக இருப்பார் என்று தேர்வுசெய்துள்ளோம். கேமரூன் கிரீன் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.