பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய முகமது சிராஜ்!

Updated: Sun, May 07 2023 12:40 IST
Image Source: Twitter

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவு செய்து இந்த சீசனில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தை காலி செய்து 9ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 181/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும் மஹிபால் லோம்ரர் 54 ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய டெல்லிக்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியுடன் அடித்து நொறுக்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் டேவிட் வார்னர் 22 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் அபாரமாக செயல்பட்டு 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் அரை சதமடித்து 87 ரன்கள் குவித்தார். 

அவருடன் மிட்சேல் மார்ஷ் 26 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் ரிலீ ரோசவ் 35 ரன்கள் எடுத்ததால் 16.4 ஓவரிலேயே 187/3 ரன்கள் எடுத்த டெல்லி அதிரடியான வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் வழக்கம் போல பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறிய பெங்களூருவுக்கும் பந்து வீச்சில் ரன்களை வள்ளலாக வாரி வழங்கிய பவுலர்கள் வெற்றியை தாரை வார்த்தனர். குறிப்பாக பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் முகமது சிராஜ் வீசிய 5ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட பில் சால்ட் 3ஆவது பந்திலும் பவுண்டரியை தெறிக்க விட்டார். 

அப்படி தனது பந்துகளில் சரமாரியாக அடித்ததால் கோபமடைந்த முகமது சிராஜ் செயலில் பதிலடி காட்டுவதை விட்டு விட்டு தேவையின்றி சிறப்பாக பேட்டிங் செய்த பில் சால்ட் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை உள்ளே புகுந்து தடுக்க முயற்சித்த கேப்டன் டேவிட் வார்னருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. குறிப்பாக ஜென்டில்மேன் விளையாட்டில் அடிக்கும் பேட்ஸ்மேனுக்கு செயல்பாடுகளால் பதிலடி கொடுக்காமல் வாயில் பதிலடி கொடுத்த அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்டித்தனர். 

அதனால் அதிருப்தியடைந்த நவீன் அடுத்த சில ஓவர்களில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, இறுதியில் கௌதம் கம்பீருடன் மிகப்பெரிய சண்டைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் தேவையின்றி அதே போல சிராஜ் வம்பிழுத்த நிலையில் விராட் கோலி அமைதியாக இருந்தார். அந்த வகையில் இப்படி தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு செயலால் பதிலடி கொடுங்கள் என்று அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஏனெனில் அப்படி வாயில் மட்டுமே பதிலடி கொடுத்த அவர் இந்த போட்டியில் 2 ஓவரில் 28 ரன்களை வாரி வழங்கி முழுமையாக 4 ஓவர்களை வீச முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டார். இருப்பினும் போட்டியில் வெற்றிக்காக மல்லு கட்டிய அவர் முடிவில் பில் சால்ட்டை கட்டிப்பிடித்து கை கொடுத்து ஜென்டில்மேனாக நடந்து கொண்டார். ஆனாலும் களத்தில் ஆக்ரோசமாக நடந்து கொண்ட அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த முக்கிய போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு தொடர்ந்து புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் இருப்பதுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்த வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை