சென்னையில் திரும்பி விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது - எம் எஸ் தோனி!

Updated: Mon, Apr 03 2023 20:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, டாஸ் போடும்போது மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். இதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப் தடுமாறினார்.

அப்போது பேசிய தோனி, “சென்னையில் திரும்பி விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் சென்னையில் போட்டிகளில் விளையாடியது கிடையாது. வெறும் ஐந்து, ஆறு சீசன் தான் இங்கு விளையாடி இருக்கிறோம். சில போட்டிகளில் பார்வையாளர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள். 

சில கேலரிகள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக முழு மைதானமும் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. சென்னையில் நாங்கள் 7 போட்டிகளில் விளையாடுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது நிச்சயம் எனக்கு பெரிய விஷயமாகும். நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயித்து களத்தில் விளையாடுவதில்லை. 

சில சமயம் ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும். இதற்கு ஏற்ப நாமும் நமது இலக்கை மாற்றிக் கொண்டு வர வேண்டும். எந்த இலக்கு சரியாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதனை நோக்கி விளையாடுவதே சிறந்த விஷயமாகும். நாங்கள் இன்றைய ஆட்டத்தில் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதே 11 வீரர்களை வைத்துதான் விளையாடுகிறோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை