ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Tue, Apr 18 2023 23:29 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் இன்றைய 25ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதாரபாத் அணியும் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர். அதில் வழக்கம் போல ரோஹித் ஷர்மா முதலில் அவுட்டானார். நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன் 2 சிக்சர்களை விளாசி நம்பிக்கை கொடுத்தாலும், அந்த நம்பிக்கை 38 ரன்களை வரையே நீடித்தது. அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்தார். என்ன அவசரமோ அவுட்டாகி கிளம்பிவிட்டார். 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை 130 ரன்களை சேர்த்தது.

திலக் வர்மா 4 சிக்சர்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளில் 37 ரன்களைச் சேர்ந்தவரை புவனேஷ்குமார் விக்கெட்டாக்கினார். மறுபுறம் கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்களை குவித்து இறுதிவரை அவுட்டாகாமல் நிலைத்து நின்றார். இறுதியில் டிம் டேவிட் 16 ரன்களுடன் ரன்அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் 9 ரன்களிலும், ராகுல் திரிபாதி 7 ரன்களிலும் என அடுத்தடுத்து பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 22 ரன்களைச் சேர்த்திருந்த ஐடன் மார்கம் அட்டமிழக்கம், அடுத்து வந்த அபிஷேக் சர்மாவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசென் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், பியூஷ் சாவ்லா வீசிய 14ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை விளாசி 16 பந்துகளில் 36 ரன்களை சேர்த்த நிலையில் அதே ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தர். 

அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வாலும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசித்தள்ளிய வாஷிங்டன் சுந்தரும் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 24 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை வீசிய கேமரூன் க்ரீன் அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கெடுத்தார். பின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் அந்த ஓவரை வீச இரண்டாவது பந்திலேயே அப்துல் சமாத் 9 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த வீரர்களாலும் சோபிக்க முடியவில்லை. 

இதனால் 19.5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சீசனில் மூன்றாவது வெற்றியையும் பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை