ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் -போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

Updated: Fri, May 12 2023 12:06 IST
IPL 2023 - Mumbai Indians vs Gujarat Tiitans, Preview, Expected XI & Fantasy XI Tips (Image Source: CricketNmore)

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இன்று நடைபெறும் 57ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தமட்டில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக விளங்குகிறது. அந்த அணி குறிப்பிட்ட ஒரு வீரரை நம்பி இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் பொறுப்பேற்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்வது கூடுதல் பலமாகும். 

அந்த அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், மொஹித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் வலுசேர்க்கிறார்கள். தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோ அணிகளை அடுத்தடுத்து பந்தாடிய உற்சாகத்துடன் இருக்கும் குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதனால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க அந்த அணி அதிக ஆர்வம் காட்டும்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ரன்-ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு சிரமமின்றி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக 200 ரன் இலக்கை 21 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்திய மும்பை அணி இந்த சீசனில் ரன் இலக்கை விரட்டுகையில் 4 முறை 200 ரன்களை கடந்து வியக்க வைத்து இருக்கிறது. 

மும்பை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், அந்த அணியில் பவுலிங் பிரமாதம் என்று சொல்ல முடியாது. பந்து வீச்சில் பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப் தவிர வேறுயாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பேட்டிங்கில் சூர்யகுமார், இஷான் கிஷன், கேமருன் கிரீன், காயம் அடைந்த திலக் வர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்றுள்ள நேஹல் வதேரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். 11 ஆட்டங்களில் 191 ரன்கள் எடுத்து இருக்கும் அவர் கடைசி 5 ஆட்டங்களில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்து இருக்கிறார். இதில் 3 டக்-அவுட்டும் அடங்கும். 

அவரது பேட்டில் இருந்து அதிரடியாக ரன்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கும், விறுவிறுப்புக்கும் குறைவு இருக்காது. ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை, குஜராத் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • மும்பை இந்தியன்ஸ் - 01
  • குஜராத் டைட்டன்ஸ் - 01

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ் - இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், விஜய் சங்கர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, முகமது ஷமி, நூர் அகமது

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), ஷுப்மான் கில் (கேப்டன்), நேஹால் வதேரா
  • ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, முகமது ஷமி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரஷித் கான்

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை