கடைசி ஓவரை வீசும் பொழுது எனது இதயத்துடிப்பு 200யை தொட்டது - வருண் சக்ரவர்த்தி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டியில் இறுதி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு கேப்டன் நிதிஷ் ரானா 42, ரிங்கு சிங் 46 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் கிடைத்தது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் மார்க்ரம் 41, ஹென்றி கிளாசன் 36 ரன்கள் எடுக்க, கடைசிக்கட்டத்தில் மூன்று ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 21 ரன் மட்டுமே எடுத்து ஹைதராபாத் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் வெற்றிக்கு மூன்று ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, ஆட்டத்தின் 18 மற்றும் 20வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி, அந்த இரண்டு ஓவர்களில் ஐந்து ரன் மற்றும் இரண்டு ரன் மட்டுமே கொடுத்தார்.
வருண் சக்கரவர்த்தியின் இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே தந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது இந்த செயல்பாட்டுக்காக ஆட்டநாயகன் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.
ஆட்டநாயகன் விருது பெற்ற வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசும் பொழுது எனது இதயத்துடிப்பு 200யை தொட்டது. ஆனால் அவர்களை மைதானத்தின் நீண்ட பகுதிக்கு அடிக்க வைக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். பந்து கைகளில் இருந்து நழுவியது. அவர்களை மைதானத்தின் நீண்ட பக்கத்திற்கு அடிக்க வைப்பது மட்டுமே என்னிடம் இருந்தது. அதுதான் எனது ஒரே நம்பிக்கை.
நான் வீசிய முதல் ஓவரில் மார்க்ரம் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் நான் 12 ரன்கள் கொடுத்தேன். கடந்த ஆண்டு நான் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினேன். நான் பல விஷயங்களை முயற்சி செய்தேன். நான் எனது ரெவில்யூசனில் வேலை செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். அதில் வேலை செய்தேன்” என்று கூறி இருக்கிறார்