ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!

Updated: Thu, May 04 2023 21:15 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை களமிறங்கியனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சனின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராயும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் நிதிஷ் ரானா - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ரனா 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸல் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை பறக்கவிட்டு 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

பின் இறுதிவரை போராடிய ரிங்கு சிங் 46 ரன்களில் எடுத்திருந்த போது நடராஜன் பந்துவீச்சில் அப்துல் சமாத்தின் அபாரமான கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன், மார்கோ ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், கார்த்திக் தியாகி, ஐடன் மார்க்ரம், மயங்க் மார்கண்டே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை