நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது - நிதிஷ் ராணா!
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர். மேலும் இப்போட்ட்டியின் ஆட்டநாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.
இந்த தோல்வி குறித்து பேசிய கே கே ஆர் கேப்டன் நிதிஷ் ரானா, “ஜெய்ஸ்வால் இன்று விளையாடிய ஆட்டத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும். இன்று நான் செய்தது மிகப்பெரிய தவறாக மாறிவிட்டது. நம் வாழ்நாளில் பல நாட்கள் நாம் நினைத்தது எதுவும் நடக்காமல் போகும். அதில் இதுவும் ஒன்று. 180 ரன்கள் இந்த ஆடுகளத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அது முடியாமல் போய்விட்டது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல தவறுகளை பேட்டிங்கில் செய்தோம். இதுதான் நாங்கள் இரண்டு புள்ளிகளை இழந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. பார்ட் டைம் பந்துவீச்சாளரான நான் முதல் ஓவரை வீசி ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தேன். இதற்காக நான் நகர்த்தியக்காய் தோல்வியில் முடிந்து விட்டது. இன்றைய நாள் ஜெய்ஸ்வாலின் நாள். இதனால் அவர் பட்டையை கிளப்பி விட்டார்” என்று கூறினார்.