ஐபிஎல் 2023: பஞ்சாப் சுழலில் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Sat, May 13 2023 23:08 IST
IPL 2023: Punjab Kings beats Delhi Capitals by 31 Runs! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

ஒருபுறம் பிரப்சிம்ரன் சிங் தூணாக நின்று அடிக்க, எதிர்புறம் வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சாம் கர்ரன் 20 ரன்களிலும், ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களில் பெவிலியன் திரும்பிய போதிலும், ஆறு சிக்சர்கள் விளாசி பிரப்சிம்ரன் சிங் நங்கூரமாக நின்றிருந்தார். 17-வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 141 ரன்களை சேர்த்திருந்தது. அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 103 ரன்களை குவித்த பிரப்சிம்ரன் சிங்கை 18ஆவது ஓவரில் அவுட்டாக்கினார் முகேஷ்குமார்.

ஷாருக்கான் 2 ரன்களில் ரன் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 167 ரன்களை சேர்த்திருந்தது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், முகேஷ் குமார், பிரவீன் தூபே, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஆனால் மறுமுனையில் 21 ரன்களை எடுத்திருந்த பில் சால்ட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 3 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 5 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுமுனையில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களை எடுத்திருந்த டேவிட் வார்னரும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனையடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல், மனீஷ் பாண்டே, அமான் கான், பிரவீன் தூபே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே எடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார் 4 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார், நாதன் எல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை