ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, May 25 2023 21:54 IST
IPL 2023 Qualifier 2- Gujarat Titans vs Mumbai Indians, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.  

போடி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அஹமதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி 

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 10 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் மட்டுமே சந்தித்து வலிமைமிக்க அணியாக திகழ்ந்தது.

ஆனால் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்து, தற்போது இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான் அகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி, மோஹித் சர்மா, ரஷித் கான், நூர் அஹ்மத் ஆகியோர் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு எதிரணி பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர். அவர்களுடன் யாஷ் தயாள், தசுன் ஷனகா, அல்ஸாரி ஜோசப் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் இந்த சீசனில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியையும் வீழ்த்தி அசத்தியுள்ளது. அணியின் பந்து வீச்சு ஆட்டத்துக்கு ஆட்டம் மோசமாக இருந்த நிலையில், லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆகஷ் மத்வாலின் அபாரமான பந்துவீச்சு அணியின்   செயல்திறனை அதிகரிக்கச் செய்துள்ளது. 

மும்பை அணி இந்த சீசனில் பவர் ஹிட்டர்களையே பிரதானமாக நம்பி உள்ளது. அதிலும் குறிப்பாக கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, திலக் வர்மா ஆகியோரது ஃபார்ம் எதிரணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஆகியோர் நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 02
  • குஜராத் டைட்டன்ஸ் - 01

ஐபிஎல் கோப்பைகள்

  • ஐபிஎல் கோப்பைகள் - 15
  • மும்பை இந்தியன்ஸ் - 05
  • குஜராத் டைட்டன்ஸ் - 01
  • இதர அணிகள் -09

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, தர்ஷன் நல்கண்டே, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் (கேப்டன்), திலக் வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, முகமது ஷமி, மோஹித் சர்மா, ரஷித் கான், ஆகாஷ் மத்வால்.

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை