இந்த ஐபிஎல் சீசன் திருப்தியாக அமைந்துள்ளது - ரிங்கு சிங்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிச்சை மேற்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாற்றம் கண்டது. கடைசியில் ரிங்கு சிங், அணியை சரிவிலிருந்து மீட்டு 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசி லக்னோ அணிக்கு பயத்தை உண்டாக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு ரன்னில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் லக்னோ அணி நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிங்கு சிங், “கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நம்பினேன். அதனால் எந்த பதற்றமோ, பரபரப்போ அடையவில்லை. இந்த ஐபிஎல் சீசன் திருப்தியாக அமைந்துள்ளது. அதனால் இந்திய அணிக்கு தேர்வாவது பற்றி நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஆடுவது என் கைகளிலும் இல்லை. எனது பயிற்சியை தொடர்வதே என்னுடைய திட்டம். இந்த ஐபிஎல் சீசன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், எனக்கு பலரும் அதிக மரியாதையை கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.