அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்?- சஞ்சு சாம்சன்!
கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் முதலில் செய்த ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.
மிகப்பெரிய இலக்கு என்பதால் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பட்லர் - ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பின்னர் வந்த பட்லர் - சஞ்சு சாம்சன் இணைக்கு ரன் ரேட் பிரஷரோடு சேர்ந்து விக்கெட் இழக்காமல் ஆட வேண்டிய பிரஷரும் சேர்ந்தது.
இறுதியில் ஹெட்மையர் மற்றும் துருவ் இணை அதிரடியாக விளையாடி அணியை ஏறத்தாழ வெற்றியை உறுதிசெய்த நிலையில், கடைசியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த நிலையில் பட்லர் தொடக்க வீரராக களமிறக்கப்படாதது ஏன் என்று கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “ஃபீல்டிங்கின் போது பட்லருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்வதற்காக தயாராவதற்கு சில நேரங்கள் பிடித்தது. அவருக்கு பதிலாக படிக்கலை தொடக்க வீரராக களமிறக்கலாமா என்று ஆலோசித்தோம்.
ஆனால் பஞ்சாப் அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் ராகுல் சஹர் என்று இரு ஸ்பின்னர்கள் இருந்ததால் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. ஏனென்றால் ஸ்பின்னர்களை படிக்கலால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது. இதன் காரணமாகவே அஸ்வினை தொடக்க வீரராக அனுப்பி வைத்தோம்” என்று தெரிவித்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி எடுத்த இந்த இரு யுக்திகளும் அந்த அணிக்கே பாதகமாக அமைந்தது. தொடக்க வீரராக வந்த அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதேபோல் படிக்கல் ஸ்பின்னர்களை அச்சுறுத்தம் வகையிலும் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.