ஐபிஎல் 2023: தவான், பிரப்சிம்ரன் காட்டடி; ராஜஸ்தானுக்கு 198 டார்கெட்!

Updated: Wed, Apr 05 2023 21:33 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று கௌஹாத்தில் நடைபெற்று வாரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, அதன்பின் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 60 ரன்களைச் சேர்த்திருந்த பிரப்சிம்ரன் சிங், ஜோஸ் பட்லரின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் பனுகா ராஜபக்சா வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த ஜித்தேஷ் சர்மா 27 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது 50ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து, விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்து அசத்தினார். அதன்பின்னும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு வானவேடிக்கைக் காட்டினார்.  

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள்ள் என 86 ரன்களைச் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை