ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நேரந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இருவரும் இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விருத்திமான் சஹா 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து வந்த சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷுப்மன் கில்லிற்கு ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தார்.
அதேசமயம் மறுபக்கம் பவுண்டரியும் சிக்சர்களுமாக வெளுத்து வாங்கிய ஷுப்மன் கில் 49 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரின் 3ஆவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்சர்கள் என 129 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ரிட்டையர்ட் அவுட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் வந்த ரஷித் கானும் அதிரடி காட்டினார். அவருக்கு துணையாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கடைசி பந்தில் சிக்சர் அடித்ததுடன் 28 ரன்களைச் சேர்த்து இன்னிங்ஸை முடித்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.