ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!

Updated: Fri, Apr 14 2023 23:20 IST
Image Source: Google

பதினாறாவது ஐபிஎல் சீசனின் 19 ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு துவக்கம் தர வந்த மயங்க் அகர்வால் மற்றும் ஹாரி புரூக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் கொடுத்தார்கள். மயங்க் அகர்வால் 13 பந்தில் 9 ரன்களும், அடுத்து வந்த ராகுல் திரிபாதி 4 பந்தில் 9 ரன்களும் எடுத்து ரசல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் ஹாரி புரூக் உடன் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 26 பந்துகளில் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்து வந்த இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதற்கிடையில், இவர்கள் இருவருடனும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் மூன்று ஆட்டங்கள் கழித்து தனது முதல் அரை சதத்தை ஐபிஎல் தொடரில் பதிவு செய்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில், 55 பந்துகளை மொத்தமாக சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் இந்த ஐபிஎல் சீசனிலும் தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று அசத்தினார். இறுதியில் வந்த கிளாசன் ஆட்டம் இழக்காமல் 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி நான்கு விக்கட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவே ஒரு அணியின் தற்போதைய அதிகபட்ச ரன்களாகும். கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றி மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன் ஆகியோர் மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் - நிதீஷ் ராணா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸலும் 3 ரன்களில் மயங்க் மாகண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த நிதீஷ் ராணா நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் அதிரடியாக விளையாடி வந்த நிதீஷ் ராணா 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் நம்பிக்கையை கைவிடாமல் விளையாடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இருப்பினும் கேகேஆர் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஹைதராபாத் அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 58 ரன்களை சேர்த்திருந்தார். 

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை