ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய போல்ட; சூப்பர் மேனாக மாறிய சாம்சன் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஓப்பனிங் செய்தனர். முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள் அடித்து மிகச்சிறந்த துவக்கம் கொடுத்தார். மறுமுனையில் பட்லர் சற்று நிதானமாக ஆடிவந்தார்.
பவர்-பிளே ஓவர்களில் ஜெய்ஸ்வால்-பட்லர் ஜோடி 68 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த சீசனில் இவரது 2ஆவது அரைசதமாகும். துரதிஷ்டவசமாக, இவர் 31 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 11 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் அடித்து அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு பட்லர்-ஜெய்ஸ்வால் ஜோடி 8.3 ஓவர்களில் 98 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் வெளியேறியபின் தனது ஆட்டத்தை ஆரம்பித்த பட்லர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அடுத்ததாக, உள்ளே வந்த சஞ்சு சாம்சன்(0), ரியான் பராக்(7) இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ரன்குவிக்கும் வேகம் குறைந்து. பின்னர் ஹெட்மயர் உள்ளே வந்ததும் அடிக்க ஆரம்பித்ததால் ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் மீண்டும் வேகமாக உயர ஆரம்பித்தது. ஜோஸ் பட்லர் 51 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 11 பவுண்டரிகள் உட்பட 79 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசிவரை நின்று ஆடிய ஹெட்மயர் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 239 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த போட்டியில் கலக்கிய துருவ் ஜூரல் 8(3) ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஓபனிங் செய்தனர். ராஜஸ்தான் அணிக்கு ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் பிரித்வி ஷா அடிக்க முயற்சித்தபோது பந்து கீப்பர் வசம் சென்றது. அதை மின்னல்வேகத்தில் பாய்ந்து பிடித்து மிரளவைத்தார் சஞ்சு சாம்சன்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் முதல் பந்திலே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட் அந்த ஓவரில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் மெய்டனாகவும் மாற்றி அசத்தினார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.